இருபத்திமூன்றாம் அதிகாரம்

bookmark

23. வேந்தற்கு உற்றுழிப் பிரிவு

பேரின்பக் கிளவி
உற்றுழிப் பிரிவார் எட்டும் ஆனந்தம்
பெற்றவா ராமை முற்றும் உரைத்தல்.

1. பிரிந்தமை கூறல்

போது குலாய புனைமுடி வேந்தர்தம் போர்முனைமேல்
மாது குலாயமென் னோர்க்கிசென் றார்நமர் வண்புலியூர்க்
காதுகுலாய குழைஎழி லோனைக் கருதலர்போல்
ஏதுகொ லாய்விளை கின்ற(து)இன்(று) ஒன்னார் இடுமதிலே. ... 316

கொளு
விறல்வேந்தர் வெம்முனைக்கண்
திறல் வேந்தர் செல்வர் என்றது.

(அருளுயிர் இன்பமடுத்தோர்க்குரிமை,என்ன வுதவியாமென்றரற்குரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

2. பிரிவாற்றாமை கார்மிசை வைத்தல்

பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர்
வன்னி வளைத்த வளர்சடை யோனை வணங்கலர்போல்
துன்னி வளைத்தநம் தோன்றற்குப் பாசறை தோன்றுங் கொலோ
மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்முகிலே. ... 317

கொளு
வேந்தற்கு உற்றுழி விறலோன் பிரிய
ஏந்திழை பாங்கிக்(கு) எடுத்து ரைத்தது.

(அனுபவமடுத்தொர்க் கறிவித்திடவும் அன்பே இன்பாய் எங்கும் கலந்தது என்பது பேரின்பப்பொருள்)

3. வான் நோக்கி வருந்தல்

கோலித் திகழ்கிற(கு) ஒன்றின் ஒடுக்கிப் பெடைக் குருகு
பாலித் திரும்பனி பார்ப்பொடு சேவல் பயில்இரவின்
மாலித் தனையறி யாமறை யோன்உறை அம்பலமே
போலித் திருநுத லாட்(கு)என்ன தாங்கொல்என் போதரவே. ... 318

கொளு
மானோக்கி வடிவு நினைத்தோன்
வானோக்கி வருந்தியது.

(அனுபவம் பிறக்கு அடுத்தது கண்டவ் வின்பப் பிரிவை எண்ணி அன்பாயது என்பது பேரின்பப்பொருள்)

4. கூதிர் கண்டு கவறல்

கருப்பினம் மேவும் பொழில்தில்லை மன்னன்கண் ணார்அருளால்
விருப்பினம் மேவச்சென் றார்க்கும்சென்(று) அல்குங்கொல் வீழ்பனிவாய்
நெருப்பினம் மேய்நெடு மால்எழில் தோன்றச்சென் றாங்குநின்ற
பொருப்பினம் ஏறித் தமியரைப் பார்க்கும் புயலினமே. ... 319

கொளு
இருங்கூதிர் எதிர்வு கண்டு
கருங்குழலி கவலை யுற்றது.

(இன்பன்பாகி இருத்தலால் உயிரை அன்பே பிரிவாற்றாமை இயம்பல் என்பது பேரின்பப்பொருள்)

5. முன் பனிக்கு நொந்துரைத்தல்

கற்றின வீழ்பனி தூங்கத் துவண்டு துயர்கஎன்று
பெற்றவ ளேஎனைப் பெற்றாள் பெடைசிற கான்ஒடுக்கிப்
புற்றில வாளர வன்தில்லைப் புள்ளும்தம் பிள்ளைதழீஇ
மற்றினம் சூழ்ந்து துயிலப் பெறும்இம் மயங்கிருளே. ... 320

கொளு
ஆன்றபனிக்(கு) ஆற்றா(து) அழிந்(து)
ஈன்றவளை ஏழை நொந்தது.

(பிரிவு அன்புக்கிலை எனப் பரையை நொந்தது என்பது பேரின்பப்பொருள்)

6. பின்பனி நினைந்து இரங்கல்

புரமன்(று) அயரப் பொருப்புவில் ஏந்திப் புத் தேளிர்நாப்பண்
சிரம்அன்(று) அயனைச்செற் றோன்தில்லைச் சிற்றம்பலம் அனையாள்
பரம்அன்(று) இரும்பனி பாரித்த வாபரந்(து) எங்கும்வையம்
சரமன்றி வான்தரு மேலொக்கும் மிக்க தமியருக்கே. ... 321

கொளு
இரும்பனியின் எதிர்வு கண்டு
சுரும்பிவர் குழலி துயரம் நினைந்தது.

(பிரிவுண்டேல் இன்பம்பெறலாம் என்று உயிர் இன்பநோக்கி எடுத்துரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

7. இளவேனில் கண்டு இன்னல் எய்தல்

வாழும் படியொன்றும் கண்டிலம் வாழிஇம் மாம்பொழில்தேன்
சூழும் முகச்சுற்றும் பற்றின வால்தொண்டை யங்கனிவாய்
யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலம் ஆதரியாக்
கூழின் மலிமனம் போன்(று)இருளா நின்ற கோகிலமே. ... 322

கொளு
இன்னிள வேனில் முன்னுவது கண்டு
மென்னகைப் பேதை இன்னல் எய்தியது.

(உயிரின்பின்பே உன்னி உரைத்தல் என்பது பேரின்பப்பொருள்)

8. பருவங் காட்டி வற்புறுத்தல்

பூண்பதென் றேகொண்ட பரம்பன் புலியூர் அரன் மிடற்றின்
மாண்பதென் றேஎண வானின் மலரும் மணந்தவர்தேர்
காண்பதன் றேயின்று நாளையிங் கேவரக் கார்மலர்த்தேன்
பாண்பதன் தேர்குழ லாய்எழில் வாய்த்த பனிமுகிலே. ... 323

கொளு
கார்வருமெனக் கலங்கு மாதரைத்
தேர் வருமெனத் தெளிவித்தது.

(அருள் சிவத்துக்கு உயிர்வரவு நலம் கூறியது என்பது பேரின்பப்பொருள்)

9. பருவம் அன்று என்று கூறல்

தெளிதரல் காரெனச் சீர்அனம் சிற்றம் பலத்தடியேன்
களிதரக் கார்மிடற் றோன்நட மாடக்கண் ணார்முழவம்
துளிதரல் காரென ஆர்த்தன ஆர்ப்பத்தொக்(கு) உன்குழல்போன்(று)
அளிதரக் காந்தளும் பாந்தளைப் பாரித்(து) அலர்ந்தனவே. ... 324

கொளு
காரெனக் கலங்கும் ஏரெழில் கண்ணிக்கு
இன்துணைத் தோழி அன்றென்று மறுத்தது.

(அன்புயிர்ப்பருவம் இன்பலாலிலை என்றால் என்பது பேரின்பப்பொருள்)

10. மறுத்துக் கூறல்

தேன்திக்(கு) இலங்கு கழல்அழல் வண்ணன்சிற் றம்பலத்(து)எங்
கோன்திக்(கு) இலங்குதிண் தோள் கொண்டல் கண்டன் குழைஎழில்நாண்
போன்(று)இக் கடிமலர்க் காந்தளும் போந்தவன் கையனல் போல்
தோன்றிக் கடிமல ரும்பொய்ம்மை யோமெய்யில் தோன்றுவதே. ... 325

கொளு
பருவம் அன்றென்று பாங்கி பகர
மருவமர் கோதை மறுத்து ரைத்தது.

(அருளுயிர்ப்பருவம் அன்றுஎனச் சிவமும் உண்டே என்பது பருவமென்றுரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

11. தேர் வரவு கூறல்

திருமால் அறியாச் செறிகழல் தில்லைச் சிற்றம்பலத்(து)எம்
கருமால் விடையடை யோன்கண்டம் போற்கொண்டல் எண்டிசையும்
வருமால் உடன்மன் பொருந்தல் திருந்த மணந்தவர்தேர்
பொருமால் அயிற்கண்நல் லாய்இன்று தோன்றும்நம் பொன்னகர்க்கே. ... 326

கொளு
பூங்கொடி மருளப் பாங்கி தெருட்டியது.

(அருட்குச்சிவமுமன்புணர்த்துதலால் உயிர் பிரியாமை வரவு எடுத்துரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

12. வினை முற்றி நினைதல்

புயலோங்(கு) அலர்சடை ஏற்றவன் சிற்றம் பலம்புகழும்
மயலோங்கு இருங்களி யானை வரகுணன் வெற்பின்வைத்த
கயலோங்(கு) இருஞ்சிலை கொண்டுமன் கோபமும் காட்டிவரும்
செயலோங்(கு) எயில்எரி செய்தபின் இன்றோர் திருமுகமே. ... 327

கொளு
பாசறை முற்றிப் படைப்போர் வேந்தன்
மாசறு பூண்முலை மதிமுகம் நினைந்தது.

(அனுபவம் கண்ட அன்புயிர் சிவனது கருணை முகநோக்கிக் கசிந்துருகியது என்பது பேரின்பப்பொருள்)

13. நிலைமை நினைந்து கூறல்

சிறப்பின் திகழ்சிவன் சிற்றம் பலஞ்சென்று சேர்ந்தவர்தம்
பிறப்பின் துனைந்து பெருகுக தேர்பிறங் கும்ஒளியார்
நிறப்பொன் புரிசை மறுகினில் துன்னி மடநடைப்புள்
இறப்பின் துயின்றுமுற் றத்(து)இரை தேரும் எழில் நகர்க்கே. ... 328

கொளு
பொற்றொடி நிலைமை மற்றவன் நினைந்து
திருந்துதேர் பாகற்கு வருந்து புகன்றது.

(சிவம் பிரிவின்றிக் கருணைசெய் திறத்தைப் போதஅருளோடு புகன்று சென்றது என்பது பேரின்பப்பொருள்)

14. முகிலொடு கூறல்

அருந்(து)ஏர் அழிந்தனம் ஆலம்என்(று) ஓல மிடும்இமையோர்
மருந்(து)ஏர் அணிஅம் பலத்தோன் மலர்த்தாள் வணங்கலர்போல்
திருந்(து)ஏர் அழிந்து பழங்கண் தரும்செல்வி சீர்நகர்க்(கு)என்
வரும்தேர் இதன்முன் வழங்கேல் முழங்கேல் வளமுகிலே. ... 329

கொளு
முனைவற்கு உற்றுழி வினைமுற்றி வருவோன்
கழுமல் எய்திச் செழுமுகிற்(கு) உரைத்தது.

(அன்பிற்கு முன்பின் பாரவுயிர் சென்றது என்பது பேரின்பப்பொருள்)

15. வரவெடுத்துரைத்தல்

பணிவார் குழைஎழி லோன்தில்லைச் சிற்றம் பலம்அனைய
மணிவார் குழல்மட மாதே பொலிகநம் மன்னர்முன்னாப்
பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமும் கொண்டுவண்தேர்
அணிவார் முரசினொ(டு) ஆலிக்கும் மாவோ(டு) அணுகினரே. ... 330

கொளு
வினைமுற்றிய வேந்தன் வரவு
புழையிழைத் தோழி பொற்றொடிக்(கு) உரைத்தது.

(பரசமயமாதிபால் சிவமே ஆக்கி உயிர் வர அருளே புகன்றது என்பது பேரின்பப்பொருள்)

16. மறவாமை கூறல்

கருங்குவ ளைக்கடி மாமலர் முத்தங் கலந்திலங்க
நெருங்கு வளைக்கிள்ளை நீங்கற் றிலள்நின்று நான்முகனோ(டு)
ஒருங்கு வளைக்கரத் தான் உண ராதவன் தில்லையொப்பாய்
மருங்கு வளைத்துமன் பாசறை நீடிய வைகலுமே. ... 331

கொளு
பாசறை முற்றிப் பைந்தொடியோ(டு) இருந்து
மாசறு தோழிக்கு வள்ளல் உரைத்தது.

(அறிவு பிறிதாயின் மறதியுண்டு என்ன அருட்கு உயிர் இயம்பி அன்பாயினது என்பது பேரின்பப்பொருள்)