இருபத்தொன்றாம் அதிகாரம்

bookmark

21. காவற்பிரிவு

பேரின்பக் கிளவி
காவற் பிரிவுத் துறையோர் இரண்டும்
இன்பத் திறத்தை எங்கும் காண்டல்.

1. பிரிவு அறிவித்தல்

மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள்
வீப்பான் வியன்தில்லை யான்அரு ளால்விரி நீர்உலகம்
காப்பான் பிரியக் கருதுகின் றார்நமர் கார்க்கயற்கண்
பூப்பால் நலம்ஒளி ரும்புரி தாழ்குழல் பூங்கொடியே. ... 312

கொளு
இருநிலம் காவற்(கு) ஏகுவர் நமரெனப்
பொருகடர் வேலோன் போக்(கு)அறி வித்தது.

(உலகம் யாவும் இன்பாய்க்காணும் அருமை அருளே அரிந்து உரைத்தது என்பது பேரின்பப்பொருள்)

2. பிரிவு கேட்டு இரங்கல்

சிறுகண் பெருங்கைத்திண் கோட்டுக் குழைசெவிச் செம்முகமாத்
தெறுகட் டழியமுன் னுய்யச்செய் தோர்கருப் புச்சிலையோன்
உறுகண் தழலுடை யோன்உறை அம்பலம் உன்னலரின்
துறுகள் புரிகுழ லாய்இது வோஇன்று சூழ்கின்றதே. ... 313

கொளு
மன்னவன் பிரிவு நன்னுதல் அறிந்து
பழங்கண் எய்தி அழுங்கல் சென்றது. 2

(இன்பமநாதி இயல்பெடுத்தருளி அன்பில் கருணை எடுத்தியம்பியது என்பது பேரின்பப்பொருள்)