கும்மினியாள் அழுது வந்தாள் - 2

bookmark

அடிக்க வர ராஜாவே
ஐயா சரண மின்னே
எட்டுத் தலைவாசலும்
இருபத்தெட்டு ஆசாரமும்
கொல்ல வரு வாரோ
கொலங் குத்தி பேசுவாரோ
கொல்ல வர ராசாவே
கோடி சரண மின்னே
எட்டரங்காம் மாளிகையாம்
எடுத்தெடுக்கும் தண்டியலாம்
எடுத்தெடுக்கும் தண்டியலை
எதிர்த்திருந்து எய்தானோ
பத்தரங்காம் மாளிகையாம்
பார்த்தெடுக்கும் தண்டியலாம்
பார்த்தெடுக்கும் தண்டியலை
பார்த்திருந்து எய்தானோ
கோடி மாதுளம் பூவாம்
கோட்டாற்றுத் தாழம் பூவாம்
கோடி முடியு மின்னே
குயில் பறந்த மாயமென்ன
பதக்கு மாதலம் பூவாம்
பருவமுள்ள தாழம் பூவாம்
பாத்து முடியுமின்னே
பறந்தோடிப் போனதென்ன
அரங்கு துறந்து
அரளிப் பதி உண்டுபண்ணி
ஆண்டியார் வாழ்வதற்கு
அரும் பெடுத்தும் சாத்தலையே
பொட்டி துறந்து
பூப்பதிகள் உண்டு பண்ணி
பொண்ணடியாள் வாழ்வதற்
பூவெடுத்துச் சாத்தலையே
அல்லிப் போல் பொண்ணும்
அருச்சுனன் போல் மாப்பிள்ளையும்
அல்லி போல் வாழ
அழைத்தார் தஞ்சமின்னே
சீதை போல் பொண்ணும்
ராமர் போல் மாப்பிள்ளையும்
சீதை போல் வாழ
சீமை பொறுக்கலையே
ஆனை அலங்காரம்
அம்பாரிச் சிங்காரம்
ஆனைமேல் பட்டாணி
அம்பு கொண்டு எய்தானோ
குதிரை அலங்காரம்
கூடாரச்சிங்காரம்
குதிரைமேல் பட்டாணி
கொம்பு கொண்டு எய்தானோ.

குறிப்பு : இப்பாட்டு தமிழ் நாட்டில் பட்டாணியரும் கும்பினியாரும் சேர்ந்து மறவர் பாளையங்களை அடக்கிய காலத்தில் தோன்றியிருக்கலாம். பட்டாணியை வருணிக்கும்பொழுது தற்கால லேவாதேவிக்காரனாக வருணிக்காமல் ஆனைமேல் அம்பாரி வைத்து ஏறி வருபவனாகவும் கூடாரத்தில் வாழ்பவனாகவும் வருணித்திருக்கிறது. இது படையெடுத்து வந்த பட்டாணியரையே குறிக்கும், மறவர் பாளையங்களை அடக்கி வந்த மாபூஸ்கான் கான்சாகிப் ஆகியோர்களைப் பற்றிய நினைவு சிறிது காலத்திற்கு மறவர் பாளையங்களில் மங்கவில்லை. அதற்கடுத்து இருபது வருடங்களுக்குள்ளாக, கும்பினியார் ஆட்சி நிலைத்துவிட்டது. இப்பாடலில் இறந்து போனதாகச் சொல்லப்படும் மனிதன் இச் சன்டைகளில் இறந்தவனாக இருக்கலாம். வழக்கமாகக் கால தூதர் வருகையைக் குறிப்பிடும் ஒப்பாரி “ஆசார வாசலில் ராஜாக்கள் வந்திறங்க” என்றும், “கொல்ல வருவாரும் கொலங்குத்திப் பேசுவாரும்” என்றும் கூறகிறது. எனவே இவனுக்கு ஏற்பட்ட சாவு இயற்கை சாவு அல்ல என்று தோன்றுகிறது. இக் காரணங்களால்,இப்பாடலின் முக்கிய பகுதிகள் சுமார் 230 வருடங்களுக்கு முன்னால் பாடப்பட்டிருக்க வேண்டும் என்று கூறலாம்.

சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
-----------