குரு நிந்தை

530.
பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்
உற்றிருந் தாரை உளைவன சொல்லுவர்
கற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தார்அன்றி யார்பெறும் பேறே. 1
531.
ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கு ஓர்உகம்
(1). வாரிடைக் கிருமியாய் (2).மாய்வர் மண்ணிலே. 2
(1). பாரிடைக்.
(2). படிகுவர், பழகுவர்.
532.
பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்
சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் (1). மாண்டிடும்
சத்தியம் (2).ஈது சதாநந்தி ஆணையே. 3
(1). மாய்ந்திடுஞ்.
(2). சொன்னோம்.
533.
மந்திரம் ஓரெழுத்து உரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே. 4
534.
ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே. 5
535.
சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்
நன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்
பன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே. 6
536.
கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதிபோன்றும்
கைப்பட்ட நெய்பால் தயிர்நிற்கத் தானறக்
கைப்பிட்டுண் பான்போன்றுங் கன்மிஞானிக் கொப்பே. 7