சக்களத்தி

bookmark

கிராமப்புறங்களில் சொத்து சுகமில்லாதவர்கள் சில வசதிகளுக்காகவோ,அல்லது உழைப்பின் ஊதியம் தனக்கு வரும் என்று கருதியோ, ஒரு மனைவி உயிர் வாழும்பொழுதே மறுமணம் செய்து கொள்வதும், தன்னைவிட வசதியுள்ள பெண்களை வைப்பாக வைத்துக் கொள்ளுவதும் ஓரளவு வழக்கமாயிருந்தது. சொத்துரிமை முறையால், கிழவனைக் கட்டிக்கொண்ட குமரிகள் விதவைகளாக வாழ்வது சாதாரணமாகக் காணப்படுகிறது. இதனால் கணவனை இழந்த மனைவிமார்கள் வாய்விட்டு அரற்றுவார்கள். அதற்குக் காரணம் என்று தமது சக்களத்திமாரைச் சபிப்பார்கள். சமண சமயத்தினளான கண்ணகி, கோவலனைச் சபிக்கவில்லை. ஏனெனில் "தெய்வம் தொழாள், கொழு நற்றொழு தெழுவாள்" என்ற சைன மறையைப் பின் பற்றியவள் அவள். அவள் பெண்ணாகையால் அவளுக்கு `காதிகா பூமி` என்ற சுவர்க்கம் கிட்டாது. அடுத்த பிறவியில் ஆணாகப் பிறக்க வேண்டும். அதற்கு அவள் இப் பிறவியில் கணவனைத் தெய்வமாக வணங்க வேண்டும். தவறு செய்தால் விதி தண்டிக்கும். ஆனால் நமது கிராமத்துப் பெண்ணோ சமண வேதம் தெரிந்தவளல்ல. ஆகவே தனது உள்ளத்தின் கோபதாபங்களைத் தடிப்பாகவே வெளியிடுகிறார்கள்.

(முதல் மனைவி அல்லது காதலி பாடுவது)
மதுரைக்குப் போகாதிய 
மாங்கா தேங்கா வாங்காதிய 
மதுரைக் கடைச் சக்களத்தி 
மறக்கப் பொடி போட்டிடுவா
வருவாரு போவாரு
வாசலுல நிப்பாரு 
சிரிச்சாலும் பேசமாட்டார்

சிறுக்கி போட்ட மையலாலே 
குதிரை வாலிக் கருது போல 
குறிச்ச பொண்ணு நானிருக்கேன் 
கூறு கெட்ட அத்தை மகன் 
குறத்தியோட சகவாசம் 
முளகாப் பழம் போல 
முத்தத்துல வந்து நிக்கேன் 
மூதேவி அத்தை மகன் 
முண்டச்சியிடம் சகவாசம் 
பதினெட்டுப் பணியாரம் 
மதிலெட்டிக் கொடுத்தாலும் 
இரவலடி என் புருஷன் 
எனக்குத் தான் சொந்தமடி 
அத்தாப்பு வீடு கட்டி 
அதுல ரெண்டு ஜன்னல் வச்சி 
எட்டி எட்டிப் பார்த்தாலும் 
என் புருஷன் தானேடி 
செட்டிக் கடை வெட்டி வேரு 
சிவகாசிப் பன்னீரு 
மதுரைக் கடைச்சக்களத்தி 
மறக்கப் பொடி போட்டா 
குதிரைவாலிக் கருது போல 
குறிச்ச பொண்ணு நானிருக்கேன் 
சரவட்டைக் கருதுக்காக 
சாம வழி போகலாமா? 
பூசணிக் கீரை தாரேன் 
புத்தி கெட்ட சக்களத்தி 
சாரணத்தி கரை தாரேன் 
சாமியத்தான் விட்டுரடி 
காலுரெண்டும் வட்டக்காலு 
கண்ணுரெண்டும் இல்லிக்கண்ணு 
இல்லிக்கண்ணு சக்களத்தி 
ஏசுராளே சாடையிலே

-------------