நரேனின்(சுவாமி விவேகானந்தரின்) கேள்வி

`காசியைக் கண்ட ஒருவரே, காசியைப் பற்றிக் கூறி உங்களை அங்கு அழைத்துச் செல்ல முடியும்`என்பது பழமொழி. தான் போதிப்பதை உணர்ந்த ஆசிரியரே தேவை என்பதே இதன் பொருள். நாம் எதையாவது கற்க விரும்பினால், அதைப் பற்றி அனைத்தும் அறிந்த ஆசிரியர், குரு நமக்குத்த் தேவை. ஆகவே கடவுளை யாரேனும் அறிய விரும்பினால், கடவுளை பற்றி தெரிந்த ஒருவரை அணுக வேண்டும். அத்தகைய ஒருவரை நரேன்(விவேகானந்தர்) தேட ஆரம்பித்தான். தான் சந்தித்த அத்தனை மத குருமார்களிடமும் அவன் கேட்ட கேள்வி இது ஒன்றே. `ஐயா, தாங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?` ஆனால் ஒருவர் கூட அவனுக்குத் தான் கடவுளைக் கண்டதாகக் கண்டிருப்பதாகக் கூறமுடியவில்லை.
ஒரு நாள் நரேனின் அண்டை வீட்டினர் ஒருவர் அவனைத் தன் வீட்டில் பாடுவதற்காக அழைத்திருந்தார். அந்த வீட்டினர் அன்று பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை தம் கௌரவ விருந்தாளியாக அழைத்திருந்தனர். நரேன் மிக இனிமையாகப் பாடக் கூடியவனாதலால், ஸ்ரீ ராமகிருஷ்ணரை முன்பு பாடுவதற்காக அவனையும் அழைத்திருந்தனர்.
நரேனின் பாடல்களைக் கேட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணர் மிகவும் ஆனந்தமடைந்தார். நரேனை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. தான் வசிக்கும் தட்சினேசுவரத்திற்கு அவனை வரும்படியும், அங்கு வந்து தனக்காகப் பாடும்படியும் வேண்டினார்.
இதுவே ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கும் நரேனுக்கும் இடையே நடந்த முதல் சந்திப்பு என்றாலும் அது நரேனிடத்தில் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதன்பிறகு நரேனுக்குத் திருமணம் செய்ய பெற்றோர் முயற்சிக்க ஆரம்பித்தனர். ஆன்மிக லட்சியம் கொண்ட நரேன் அதற்கு உறுதியாக மறுத்துவிட்டார். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் பக்தர்களில் ஒருவரான ராமசந்திர தத்தர் நரேனிடத்தில் இருந்த ஆன்மிக நாட்டத்தைக் கவனித்தார். எனவே அவர் நரேனை தட்சனேசுவரம் சென்று ஸ்ரீ ராமகிருஷ்ணரைச் சந்திக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி தட்சனேசுவரம் சென்று அவரைச் சந்திக்க முடிவு செய்தார் நரேன்(விவேகானந்தர்).