பெரியாரைத் துணைகோடல்

543.
ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொளி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும்
கூடவல் லாரடி கூடுவன் யானே. 1
544.
தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்
மாமனதது அங்குஅன்பு வைத்தது இலையாகும்
நீஇடர்ப் பட்டிருநது என்செய்வாய் நெஞ்சமே
போமிடத் து என்னொடும் போதுகண் டாயே. 2
545.
அறிவார் அமரர் தலைவனை நாடிச்
செறிவார் பெறுவர் (1). சிலர்தத் துவத்தை
நெறிதான் மிகமிக நின்றருள் செய்யும்
பெரியார் உடன்கூடல் பேரின்ப மாமே. 3
(1). சிவதத்துவத்தை.
546.
தார்சடை யான்தன் தமராய் உலகினில்
போர புகழா எந்தை பொன்னடி சேருவர்
வாயடை யாவுள்ளம் தேர்வார்ககு அருள்செய்யும்
கோவந்தடைந் து அந்நெறி கூடலு மாமே. 4
547.
உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
படையார் அழல்மேனிப் பதிசென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலம் என் றாரே. 5
548.
அருமைவல் லோன்கலை (1).ஞானத்துள் தோன்றும்
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன்உணர்ந்து ஊழி இருக்கும்
திருமைவல் லாரொடு சேர்ந்தனன் யானே. 6
(1). ஞாலத்துள்
இரண்டாம் தந்திரம் முற்றிற்று