மூவகைச்சீவ வர்க்கம்

492.
சத்தி சிவன்விளை யாட்டால் உயிராக்கி
ஒத்த இருமாயா கூட்டத் திடைப்பூட்டிச்
சுத்தம தாகுந் துரியம் புரிவித்துச்
சித்தம் புகுந்து சிவமய மாக்குமே. 1
493.
விஞ்ஞானர் நால்வரு மெய்ப்பிரள யாகலத்
தஞ்ஞானர் மூவருந் தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரு மாகும் பதின்மராம்
விஞ்ஞான ராதியர் வேற்றுமை தானே. 2
494.
விஞ்ஞானர் கேவலத் தாரது விட்டவர்
தஞ்ஞானர் அட்டவித் தேசராஞ் சார்ந்துளோர்
எஞ்ஞானர் ஏழ்கோடி மந்திர நாயகர்
மெய்ஞானர் ஆணவம் விட்டுநின் றாரே. 3
495.
இரண்டா வதில்முத்தி எய்துவர் அத்தனை
இரண்டாவ துள்ளே இருமல பெத்தர்
இரண்டாகு நூற்றெட்டு ருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தர் மும்மலத் தாரே. 4
496.
பெத்தெத்த சித்தொடு பேண்முத்தச் சித்தது
ஒத்திட் டிரண்டிடை யூடுற்றார் சித்துமாய்
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத் தமிழ்ந்து சகலத்து ளாரே. 5
497.
சிவமாகி ஐவகைத் திண்மலஞ் செற்றோர்
அவமாகார் சித்தர்முத் தாந்தத்து வாழ்வார்
பவமான தீர்வோர் பசுபாசம் அற்றோர்
நவமான தத்துவம் (1).நாடிக்கண் டோ ரே. 6
(1). நாடிக்கொண் டாரே
498.
விஞ்ஞானர் ஆணவ கேவல மேவுவோர்
விஞ்ஞானர் மாயையில் தங்கும் இருமலர்
அஞ்ஞானர் அச்சக லத்தர் சகலராம்
விஞ்ஞான ராதிகள் ஒன்பான்வே றுயிர்களே. 7
499.
விஞ்ஞான கன்மத்தால் மெய்யகங் கூடிய
அனையான கன்மத்தி நால்சுவர் யோனிபுக்
கெஞ்ஞான மெய்தீண்டி யேயிடை யிட்டுப்போய்
மெய்ஞ்ஞான ராகிச் சிவமேவல் உண்மையே. 8
500.
ஆணவந் துற்ற வவித்தா நனவற்றோர்
காணிய விந்துவா நாத சகலாதி
ஆணவ மாதி யடைந்தோ ரவரன்றே
சேணுயர் சத்தி சிவதத் துவமாமே. 9